சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்தார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், அவர் நடித்த ஏ1, தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ், டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில், G.N.அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தில் அனைத்து இளைஞர்களும் ரசித்துக் கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஆனந்த் நாராயண் இயக்கியுள்ள இப்படத்தில், சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், மறைந்த நடிகர் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.