சென்னை: இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், நடிகை ப்ரியா லயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'இங்க நான் தான் கிங்கு'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 3) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆனந்த் நாராயண், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சேஷு மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், நடிகர் தம்பி ராமையா பேசுகையில், "இன்றைக்கு சினிமாவை தமிழ், மலையாளம் எனப் பிரித்துப பார்க்கின்றனர். நம்முடைய கலையைத் தாழ்த்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இப்படம் காமெடிப் படமாக அமைந்துள்ளது. சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவரின் அணுகுமுறை தான். நிஜ ஹீரோ அவர்.
பழைய நண்பர்களைப் பக்கத்தில் வைத்து சகித்துப் பழக்கக்கூடியவர். இசையமைப்பாளர் இமான் இசை நன்றாக வந்துள்ளது. மைனா, கும்கி பட நினைவுகள் வருகின்றது எனக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி படம் செய்துள்ளேன். இந்தப் படம் யாரையும் ஏமாத்தாது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தகுதியுடைய படம்" என்றார்.
இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளருடன் இணைந்து வெள்ளக்கார துரை மற்றும் மருது படத்தில் இசையமைத்துள்ளேன். சந்தானத்துடன் படம் இசையமைக்க ரொம்ப நாள் ஆசை. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோசம். மாயோனே பாடல் நல்ல பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் படத்தில் மெலோடி பாடல் இல்லை என நான் நினைத்ததுண்டு. இந்தப் படத்தில் ஒரு பாடல் அமைந்துள்ளது" என்றார்.
நடிகர் சந்தானம் பேசுகையில், "மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டு இருக்கிற சட்டை என்னுடையது என்ற படையப்பா பட டயலாக் போல பவர்ஃபுல் தயாரிப்பாளர் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன். இந்த நிறுவனம் என்னை வைத்து படம் எடுத்தது ரொம்ப மகிழ்ச்சி.