சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் குறித்த மேலும் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார். சி.சு. செல்லப்பாவின் 'வாடிவாசல்' நாவலைத் தழுவி உருவாக்கப்படும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2021ஆம் ஆண்டே வெளியானது. ஆனால் அதற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
நீண்ட நாட்கள் கழித்து படம் தொடர்புடைய சில காட்சிகளை சோதனை அடிப்படையில் படமாக்கினர் படக்குழுவினர். அதற்காக பல்வேறு இடங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடப்பது போலவும், அதில் சூர்யா காளைகளை அடக்குவது போலவும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. இந்த சோதனை முன்னோட்ட காட்சி 2022ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகும் படப்பிடிப்பு எதுவும் தொடங்கவில்லை.
அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு வாடிவாசல் திரைப்படம் குறிந்த எந்த அறிவிப்பும் வரவில்லை. இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கப்படும் என்பது தெரியாமல் இருந்தது. ஒருவேளை வாடிவாசல் கைவிடப்பட்டதா? இல்லை படப்பிடிப்பு தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்படுமா? போன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அகிலம் ஆராதிக்க " வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகியோருடன் அவர் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரிய உள்ளனர்.
இதையும் படிங்க: இன்றைய தலைமுறையின் காதல் கதை.. ’காதலிக்க நேரமில்லை’ விமர்சனம்
மாட்டுப் பொங்கலன்று ‘வாடிவாசல்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானதை இணையத்தில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘சூர்யா 45’ இந்தாண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மேலும் `விடுதலை' திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தனுஷுடன் வெற்றிமாறன் இணைவதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.