சென்னை:இந்திய சினிமாவின் முக்கிய முகமாக பார்க்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 170 படங்களில் நடித்து, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து, தனது 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
இதன் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது, அதேபோல், சில சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. முன்னதாக, நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நதியத்வாலா சென்னையில் உள்ள ரஜினி வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
அதன் புகைப்படத்தை வெளியிட்டு, “ஜாம்பவான் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றப் போகிறேன். அவருடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது" எனப் பதிவிட்டிருந்தார். அப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது அது ரஜினிகாந்தின் 'பயோபிக்' என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த நிலையில், ரஜினியின் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தனுஷ் தற்போது இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கிறார். அவர் ரஜினி வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், தற்போது இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கவின் அல்லது மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால் பான் இந்தியா படம் என்பதால், தனுஷ் நடிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. அவரும் ஒரு மேடையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன்.. முதல் படம் எப்போது?