தமிழ்நாடு

tamil nadu

"அஜித், விஜய் போன்றவர்களை தவிர சினிமாவில் மற்றவர்கள் வாழ்க்கை இப்படித்தான்" - ஆர்.கே.செல்வமணி வேதனை! - RK Selvamani

By ETV Bharat Entertainment Team

Published : Sep 3, 2024, 12:25 PM IST

R.K Selvamani Talk About Cinema labor problems: சினிமாவில் அஜித், விஜய் போன்ற 1 சதவீத பேர் தான் நன்றாக உள்ளனர். மீதம் 99 சதவீதம் பேரின் வாழ்க்கை அன்னாடங்காச்சி வாழ்க்கை தான் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

ஸ்டண்ட் யூனியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி திருச்சி சிவா
ஸ்டண்ட் யூனியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்பி திருச்சி சிவா (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியன் வளாகத்தில் தென்னிந்தியத் திரைப்பட சினி மற்றும் டிவி ஸ்டண்ட் இயக்குநர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் சார்பில், ஸ்டண்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் மாநில காப்பீட்டு உரிமையைப் பெற்றுத் தர நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவாவிற்கு நன்றி தெரிவித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் பேசிய எம்பி திருச்சி சிவா, "எதுவும் இல்லாமல் இருந்தாலும் கூட நாம் காத்திருந்தால் அது நம்மை வந்து சேரும். கருணாநிதி தான் முதன் முதலாக திருநங்கை என்ற பெயர் கொண்டு வந்தவர். அதாவது, திரு என்பது ஆண் பால், நங்கை என்பது பெண் பால், திருநங்கைகளுக்கு வாரியம் அமைத்துக் கொடுத்தவரும் கருணாநிதி தான்.

எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார். இந்தியாவில் கை ரிக்சாவை முதன் முதலில் ஒழித்தவரும் கருணாநிதி தான். ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்வு மிளிர வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை.

போராடிதான் திருநங்கை சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது தற்போது பல் இல்லாத சட்ட மசோதாவாகவே உள்ளது. இந்த சட்ட மசோதா மூலம் திருநங்கைகளுக்கு நிறைவு கிடையாது. அதனால், திரைத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சாதாரண மனிதர்களுக்கு தேவைப்படும் கல்வி, மருத்துவம், வீடு ஆகிய வசதிகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்.

திரைத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அங்கீகாரம் இல்லை. திரைத்துறையை தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த அங்கீகாரம் வெறும் பேப்பர் அளவில் மட்டுமே உள்ளது. தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் Swiggy, Zomoto ஊழியர்கள் குறித்தும், திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் பிரச்சினை குறித்தும் பேசினேன்.

அதாவது, சமீபத்தில் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஏழுமலை என்ற கலைஞர் உயிரிழந்தார். அது வருத்தத்தை ஏற்படுத்தியது. திரைப்படத்துறையினர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, நானாகத்தான் அவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினேன். திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் வேண்டும், நலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பேசியுள்ளேன்.

அவ்வாறு அமைப்பதன் மூலம் ஸ்டண்ட் கலைஞர்களின் வாழ்வாதாரம் உயரும், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள சினிமாத்துறை தொழிலாளர்களுக்காகவும் பேசி இருக்கிறேன். திரைத்துறையினர் மருத்துவ உதவி, இன்சூரன்ஸ், வீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர், அதற்காக ஒன்றிய அமைச்சரிடமும், தமிழக முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசிய போது, "திரைப்படத்துறை நன்றி உள்ள துறை, எத்தனை காலம் ஆனாலும் நாங்கள் நன்றியை மனதில் வைத்து கொள்வோம். இங்கு யாரும் எங்களை பற்றி பேசாமல் இருக்கும் பொழுது, நீங்கள் எங்கள் கண்ணீரை பற்றி பேசியுள்ளீர்கள். முதல் முறையாக எங்களுக்காக உங்கள் குரல் உள்ளிக்கும் பொழுது மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில், அஜித், விஜய் போன்ற 1 சதவீத பேர் தான் நன்றாக உள்ளனர். மீதம் 99 சதவீதம் பேரின் வாழ்க்கை அன்னாடங்காச்சி வாழ்க்கை தான். கருணாநிதி அவர் ஆட்சி காலத்தில் எங்களுக்காக காப்பீடு திட்டம் ஒரு மகத்தான திட்டத்தைக் கொடுத்தார். ஆனால், அடுத்து வந்த ஆட்சி அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போது எங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கூறியுள்ளோம். அவர் நிறைவேற்றி தருவேன் என்று சொல்லியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ”ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் தரமான படம் வாழை" - மாரி செல்வராஜுக்கு ரஜினி பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details