சென்னை:மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் போகுமிடம் வெகுதூரமில்லை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் விமல், கருணாஸ், அருள்தாஸ், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் தயாரிப்பாளர் தேனப்பன் பேசும்போது, "தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரச்னையாக பேசப்படுவது உத்தம வில்லன் பஞ்சாயத்து மற்றும் மைக்கேல் ராயப்பன் பிரச்சனை. இந்த இரண்டு நாயகர்களை வைத்தும் நான் படம் பண்ணியுள்ளேன்.
சிம்புவை வைத்து படம் பண்ணுவதே பெரிய விஷயம் என்ற நிலையில், அவரை இயக்குநராக வைத்து படம் எடுத்துள்ளேன். எனக்கு பேசுவதற்கான உரிமை நிறைய உள்ளது. கமலை வைத்து திருப்பதி பிரதர்ஸ் உத்தம வில்லன் படத்தை எடுத்தனர்.
அப்போது நான்தான் தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக இருந்தேன். அந்த பிரச்னையில் நடிகர் கமல் கடிதத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்தார் என்பது உண்மை. அப்படம் வெளியாக பணம் போட்டது ஈராஸ் நிறுவனம் தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஒரு ரூபாய் கூட போடவில்லை.
அந்த பணத்தை செட்டில்மென்ட் செய்தது ஞானவேல் ராஜா. அதனால் அடுத்த நாளே அந்த கடிதத்தை ஞானவேல் ராஜாவிடம் கொடுத்து விட்டனர். இதனால் திருப்பதி பிரதர்ஸ் கேட்பதற்கு எந்த தொடர்பும் இல்லை. ஞானவேல் ராஜா தான் இந்த உரிமையைக் கேட்க வேண்டும். ஞானவேல் ராஜாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, என் ஆதரவு எப்போதும் கமலுக்குத்தான் என்றார்.