சென்னை: வி6 பிலிம்ஸ் - வேலாயுதம் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ வெற்றி இயக்கும் படம் நாற்கரப்போர் (Narkarappor). லிங்கேஷ், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய சுரேஷ் காமாட்சி, "இந்த படத்தின் கதையைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருந்தது. இங்கு வெற்றி, தோல்வி என்பது சகஜம். நம் வேலையை சிறப்பாக செய்தால் போதும். பட்ஜெட்டை வைத்து சிறிய படம் பெரிய படம் என்பதெல்லாம் இல்லை. சிறிய படங்களே கோடிக்கணக்கில் கலெக்ஷனை கொடுத்திருக்கிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து படத்தின் புரமோஷனுக்கு நடிகை அபர்ணதி வராததை சுட்டிக்காட்டி பேசிய அவர், படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்த போது, புரமோஷனுக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் வருகிறேன். இல்லையெனில் வரமாட்டேன் என்று சொன்னார். மேலும் தன்னுடன் மேடையில் இருக்க வேண்டியவர்கள் யார் என்பதையும் அவர் சொன்னதால் அது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அவர் வரவில்லை கேட்டதற்கு அவுட்டோரில் இருப்பதாக சொன்னார், அவங்க அவுட்டோர்லயே இருக்கட்டும். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகை தேவையில்லை. இது மிகவும் வருத்தமானது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.