சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'வழித்துணையே' ப்ரோமோ வெளியாகியுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிராகன்(Dragon)’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ’லவ் டுடே’ என்ற திரைப்படத்தை தானே இயக்கி, நடித்தார். இப்படம் மூலம் இளைஞர்களுக்கு பிடித்தமான கதாநாயகனாக மாறிய பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக லியோன் ஜேம்ஸ் இசையில் டிராகன் படத்தின் முதல் பாடல் ‘the rise of dragon’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலில் கௌதம் மேனன் பிரதீப் ரங்கநாதனுடம் குத்தாட்டம் போட்டது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டிராகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘வழித்துணையே’ (dream song) ப்ரோமோ வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்த ப்ரோமோவில் இயக்குநர் அஷ்வத், பிரதீப் ரங்கநாதன், நடிகை கயடு லோகர் ஆகியோர் வெளிநாட்டில் சென்று படப்பிடிப்பு நடத்துவது குறித்து பேசுகின்றனர்.