சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி பிப்ரவரி 21ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
’ஓ மை கடவுளே’ படத்திற்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இப்படத்திலிருந்து ‘The Rise Of Dragon’, ‘வழித்துணையே’ (Dream Song) என இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கல்லூரி, காதல், காமெடி என உருவாகியிருக்கும் ’டிராகன்’ திரைப்படம், இளம் ரசிகர்களை கவரும் விதமாக காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என கடந்த புதன்கிழமை (ஜன.15) அறிவிக்கப்பட்டது. அறிவித்த மூன்று நாட்களிலேயே ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்கனவே அறிவித்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் பிப்ரவரி 21ஆம் தேதி ’டிராகன்’ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.