மதுரை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கட்சியினரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ''கோவிலுக்கு செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உண்டியல் வசூல் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் அடிப்படை வசதிகள் இல்லை. அதனால்தான் பாஜக சார்பாக இன்று மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து பேசுகின்றோம்'' என்றார்.
கோமியம் விவகாரம்
கோமியம் குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை, '' காமகோடி இந்தியாவில் அவருடைய துறையில் பெரிய நிபுணர் ஆவார். அவருக்கு அவர் சார்ந்த மதத்தின் மீது பற்று இருக்கிறது, அதில் தவறு கிடையாது. அவர் வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் அப்படி பேசவில்லை. அது அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு, அதை குறை கூறக்கூடாது.
இஸ்லாமியர்கள் ஆதரவு
2026 தேர்தலுக்கு முன்பு எத்தனை அமாவாசை, எத்தனை பௌர்ணமி இருக்கிறது என்பதை எண்ணிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு இந்த ஆட்சி இருக்காது. முதல்வர் இந்த மீனாட்சி கோவில் வாசல் பகுதியில் நடந்து மக்களிடம் கேட்டால் தான் தற்போதைய நிலை என்னவென்று தெரியும். மைனாரிட்டியிடம் இருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது. நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள்.
கொள்கை ரீதியாக அரசியலை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை ஒரு தனி பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது. திமுகவினரை பற்றி ஒன்றுமே புரியவில்லை. செலெக்ட்டிவ் அம்னீசியா என்கின்ற ஒரு நோய் வந்துவிட்டதோ என்ற ஒரு சூழ்நிலை உள்ளது போல தெரிகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது... எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
தமிழ்நாட்டிற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 36 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருக்கிறோம். அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தெளிவாக சொல்ல வேண்டும். அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட திமுக அமைச்சர்கள் குறித்து ஒன்றுமே புரியவில்லை. இவர்களுடைய அரசியலுக்காக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?.
இந்த ஆட்சியின் (திமுக) அவலத்தை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குறை சொல்லி வருகிறார்கள். பிரதமர் இங்கே வந்தவுடன் முதலமைச்சர் போட்டி போட்டு கை கொடுக்க கவனம் செலுத்துகிறார். ஆனால், போட்டியை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு காட்ட வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆளுநர் மீது ஆபாசமாக போஸ்டர் ஒட்டுவது, வசை பாடுவது குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார்?. திமுக ஆட்சியின் மீது இருக்கக்கூடிய வெறுப்பை மறைப்பதற்கு ஆளுநரை பகடைக்காயாக காட்டுகிறார்கள்.
தற்போது என்னுடன் வந்தால் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மதுபானக் கூடங்களை நான் காட்டுவேன். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் டாஸ்மாக் தான் நம்பர் ஒன். ஆனால், ரேஷன் கடைகளில் உங்களுக்கு (அரசு) கொடுப்பதற்கு பணம் இல்லை'' என அண்ணாமலை கூறினார்.