சென்னை: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி மறைமலைநகர் உள்ளிட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெண் காவலர் உட்பட எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் கடல் கன்னி ஷோ என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. நேற்று முந்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துக்கொண்டுள்ளனர். இதில், ஈஸ்வரி (56) என்பவர் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சியை காண வருகை புரிந்துள்ளார். தொடர்ந்து, நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ஈஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதில், சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரி தாலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் ஐந்து சவரன் சங்கிலியை அறுத்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதேபோல் மற்றொரு செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள தேவராஜா தெருவை சேர்ந்தவர் இந்திரா. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்த இருவர், இந்திரா வீட்டின் கேட்டை திறக்க முற்பட்டபோது அவரின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலிச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து, பெண் காவலர் இந்திரா காவல் கட்டுப்பாட்டுறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அனைத்து காவல் நிலையங்களுக்கும், காவல் உதவி மையங்களில் உள்ள காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் என 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநக,ர் குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர விசரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில், காவலரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள், தாம்பரம் காந்தி சாலை-ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் தாம்பரம் காவல் ஆனையரகம் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தாம்பரம் காவல் ஆணையர் தலைமையில், போலீசார் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளனர். அனைத்து காவல் நிலையத்தில் இருந்த போலீசாரும் அதில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் முக்கியமான சாலை சந்திப்புகளில் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இதை அறிந்துக் கொண்டவர்கள் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.