விருதுநகர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பகுதியில் உள்ள தனது இல்லத்தில், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜனவரி 19) ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து முற்றிலும் தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார். ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை திவாலாகப் போகிறது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் கூறியது வேடிக்கையாக உள்ளது.
பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த அடிப்படையும் தெரியாதவர்களால், இதுபோன்ற அடிப்படைற்ற குற்றச்சாட்டுகளை அரசின் மீது வைக்க முடியும். நிதிக் குழு பரிந்துரைத்துள்ள வரம்பை விட, குறைவாகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளது. நிதிக் குழுதான் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது.
2021 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 2,000 கோடியாக இருந்த பட்ஜெட் அளவு தற்போது 4 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-22 நிதி ஆண்டில் 28.7 சதவீதம் கடன் பெறலாம் என நிதி குழு நிர்ணயம் செய்த நிலையில், 27.01 சதவீதம் கடன் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி குழு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம். நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான நுட்பமான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது. மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு தேவையான நிதி வழங்க வேண்டும். வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையில் தான் பார்க்கிறது” என்றார்.
பரந்தூர் விமான நிலையம்:
“பரந்தூர் விமான நிலையம் மிக அவசியமான ஒன்று. தவெக தலைவர் விஜய் மக்களை தாராளமாக சந்திக்கலாம்.விஜய் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் குறைகளை கேட்டு, குறைகளை அரசிடம் தெரிவித்தால் அதனை அரசு சரி செய்வது குறித்து ஆராயும். விமான நிலையத்தை உருவாக்குவது என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த அவசியமான ஒன்று.
இதையும் படிங்க: விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினருக்கு ஆதரவு: நாளை மறுநாள் பரந்தூர் செல்கிறார் விஜய்!
சென்னை விமான நிலையம் மிகச் சிறிய விமான நிலையமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேர் வருகிறார்கள். அடுத்த பத்து வருடத்திற்கு சென்றால் ஏறத்தாழ 8 கோடி பயணிகள் வருவார்கள். டெல்லியின் விமான நிலையம் 51 ஆயிரம் ஏக்கர், மும்பை விமான நிலையம் 1,850 ஏக்கர். ஹைதராபாத்தில் 5,500 ஏக்கர், பெங்களூரில், 4,008 ஏக்கர். ஆனால், சென்னையில் இருக்கக்கூடிய விமான நிலையத்தின் பரப்பளவு 1,300 ஏக்கர் தான் இருக்கிறது.
அளவில் சிறிதாக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு 2 கோடி பேர் இந்த விமான நிலையத்திற்கு வருகை புரிகின்றனர். அடுத்த 7 ஆண்டுகளில் இது உயரும். இதனால் சென்னை விமான நிலையத்தை விரிவுப்படுத்தினாலும், சமாளிக்க முடியாது. இதனால் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம். உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பதால், பரந்தூர் விமான நிலையம் அவசியம்” என்றார்”
முன்னதாக, சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூரில் போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.