சென்னை: தென்னிந்திய சின்னத்திரை மற்றும் திரைப்பட டப்பிங் யூனியன் சங்கத் தேர்தல், வரும் மார்ச் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ராஜேந்திரன் அணியினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராதாரவிக்கு பிறகு அவர் இடத்தை யார் நிரப்புவது என்ற கேள்வியிருந்தது. அதேபோல், இந்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன் என்று ராதாரவியும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் நான் பலமுறை பேசியிருக்கிறேன், ஆனால் அவர் யாரிடமும் எந்த ஒரு கருத்தும் கேட்காமல், வரும் தேர்தலில் கதிர் போட்டியிடட்டும் என்றார். இதில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் நான் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று என் தலைமையிலான அணியை அமைத்து வேட்புமனுத் தாக்கல் செய்தேன்.
ஆனால், நாங்கள் அவர்களுக்கு எதிராக மற்றொரு அணியை அமைத்துள்ளோம் என்று ராதாரவியை வலுக்கட்டாயமாக மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்கிறார்கள். மேலும், டப்பிங் யூனியன் கட்டிடம் கட்டும் விஷயத்தில் நிறைய முறைகேடுகளும், தேவையற்ற செலவுகளும் ராதாரவி அணியினர் செய்தனர்.
இதை வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல், செயற்குழுக் கூட்டத்திலும் இதைப் பற்றி பேச விடமாட்டார்கள். அந்த கட்டிடம் தொடர்பாக மாநகராட்சிக்கு 75 ஆயிரம் ரூபாய் பணம் கட்டியதாக சொல்கிறார்கள். ஆனால் மாநகராட்சிக்கு இவர்கள் எந்த ஒரு பணமும் கட்டவில்லை. இதன் காரணத்தினாலேயே டப்பிங் யூனியன் கட்டிடம் தகர்க்கப்பட்டது.
டப்பிங் யூனியனில் நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன் உள்பட பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் முறையாக உறுப்பினர் சந்தா கட்டுவதில்லை. அவர்களுக்கு பதிலாக ராதாரவியே கட்டிவிடுவார். அவர்களுக்கு சந்தா கட்டும் அவர், சின்மயிக்கும் சேர்த்து சந்தா கட்டியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை, அந்த பணமும் எங்கு சென்றது என்று தெரியவில்லை.
நடிகர் சூர்யா எங்கே டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிடுவாரோ என்று பயந்து, சந்தா கட்டவில்லை என்று காரணம் கூறி, அவரை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்கள். அதேபோல், கரோனா காலகட்டத்தில் அவர் உதவி செய்த காரணத்தினால் மீண்டும் கௌரவ உறுப்பினர் என்று சூர்யாவை சேர்த்தார்கள்.
அதேபோன்று, ராதாரவியுடன் இருக்கும் ஆட்களுக்கு மட்டும் முறையான வேலையைக் கொடுக்கிறார்கள். இதனால் பலரும் வேலையின்றி தவிக்கின்றனர். அதே போன்று, சங்கத்திற்கு வரும் உறுப்பினர்களை அவர்கள் கீழ்த்தரமாக நடத்துகின்றனர் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், எங்களது வெற்றி அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என்று ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:எஞ்சாயி எஞ்சாமி பாடலால் ஒரு பைசா கூட வருமானம் இல்லை… சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்!