சென்னை: தமிழ் சினிமாவில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களும், ஸ்டண்ட், கலை, ஒப்பனை, இசை உள்ளிட்ட 24 துறைகளை உள்ளடக்கிய ஃபெப்சி (FEFSI) யூனியனும் திரைத்துறை சார்ந்த அமைப்புகளாக இயங்கி வருகிறது.
திரைத்துறையில் பல்வேறு சங்கங்களில் பல பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில், அதனை ஒரே கமிட்டி மூலம் தீர்வு காண நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாத் துறையில் அதனை சார்ந்து இயங்கக்கூடிய சங்கங்களும் பெப்சி யூனியனும் ஒன்று கூடி, ஒவ்வொரு அமைப்புகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளில், மூன்று முதல் ஐந்து நபர்களை தேர்வு செய்து 'Join Action Committee' என்ற புதிய கமிட்டி உருவாக்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் நிலையில், ஒட்டுமொத்த திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஒரே கமிட்டி மூலமாக தீர்வு காண தமிழ் திரையுலகம் இந்த ஒரு புதிய முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.