மதுரை: மதுரையில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இசையமைப்பாளர் தேவா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், "மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது இசையில் வெளியான "வாராரு வாராரு அழகர் வாராரு' என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல் முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இந்த பாடலை படத்தில் பாட எனக்கு வாய்ப்பு அளித்த கேப்டன் விஜயகாந்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இசை நிகழ்ச்சியை 60 பேர் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன். காலம் கடந்து எனது இசையும், இளையராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் இசை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பதற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் இசைப் பணியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தால் என்னால் நடிக்க இயலவில்லை” எனக் கூறினார்
இசையமைப்பாளர் தேவா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதனைத்தொடர்ந்து பேசுகையில், “கந்த சஷ்டி கவசம் பாடலின் மெட்டை சூரியன் படத்தில் '18 வயதில்' என்ற பாடலுக்கு சேர்த்து இசையமைத்தேன். கதைக்கு ஏற்றது போது சேர்க்கப்படுகிறது. ஆனால் அதை காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.
‘புஷ்பா 2’ திரைப்படம் பெண் உயிரிழப்பு குறித்து கேட்ட போது, “ஹைதராபாத்தில் ’புஷ்பா 2’ படம் வெளியான போது நடிகர் அல்லு அர்ஜூனைக் காண சென்ற கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜாவை அவமதித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து கேட்ட போது, ”ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை. அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்” என்றார்
தற்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் குறித்த கேள்விக்கு, “இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசையமைக்கின்றனர், அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் வருங்காலத்திற்கு பணத்தை சேமித்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "ராம் சரணுக்கு தேசிய விருது கிடைக்கும்"... 'கேம் சேஞ்சர்' படம் பார்த்த புஷ்பா 2 இயக்குநர் பாராட்டு! - SUKUMAR ABOUT GAME CHANGER MOVIE
மேலும் இசையமைப்பாளர் தேவா பேசுகையில், “எனது பாடல்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது, அதற்காக காத்திருக்கிறேன். இசையமைப்பாளர்கள் நடிகராக மாறுவது அவர்களின் தனித்திறமை” எனக் கூறினார்.