சென்னை: தமிழர்கள் பண்டிகையான பொங்கல் (Pongal festival) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஏராளமானோர் விமானங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், விமான டிக்கெட் கட்டணம் தாறுமாறாக அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள், கல்லூரிகள் படிப்பவர்கள் பொங்கல் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடப் படையெடுத்துச் செல்கின்றனர்.
ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களிலும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் பயணத்திற்காக தமிழ்நாடு அரசும் சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்:
தற்போது, ரயில்களில் அனைத்து டிக்கெட் முன்பதிவுகளும் நிரம்பி விட்டதால், அரசு பேருந்துகளிலும் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு பயணிக்கின்றனர். அதனால், அரசு பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்கிடையே, தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பொங்கல்: கோயம்புத்தூர் வழியாக சென்னை - மதுரைக்கு சிறப்பு ரயில்! - தெற்கு ரயில்வே
இந்த நிலையில், பயணிகள் விமானங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். அதனால் நேற்று வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் பொதுவாக விமான டிக்கெட் விலை உயருவது வழக்கம், அந்த வகையில் தற்போதும் சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுகள் கட்டணங்கள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன.
இன்றைய டிக்கெட் விலை:
வ.எண் | வழித்தடம் | வழக்கமான கட்டணம் | இன்றைய கட்டணம் |
1. | சென்னை - மதுரை | ரூ.3,999 | ரூ.17,645 |
2. | சென்னை - திருச்சி | ரூ.2,199 | ரூ.14,337 |
3. | சென்னை - கோவை | ரூ.3,485 | ரூ.16,647 |
4. | சென்னை - தூத்துக்குடி | ரூ.4,199 | ரூ.12,866 |
5. | சென்னை - திருவனந்தபுரம் | ரூ.3,296 | ரூ.17,771 |
6. | சென்னை - சேலம் | ரூ.2,799 | ரூ.9,579 |
இதில் சென்னை - தூத்துக்குடி, சென்னை - சேலம் இடையே இன்று அனைத்து டிக்கெட்டுகளும் நிரம்பிவிட்டன. எனவே, நாளை விமானத்தில் தான் ஒரு சில டிக்கெட்டுகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் சென்னை - திருவனந்தபுரம் விமானங்களில் பயணிக்கின்றனர். அதன் எதிரொலியாக சென்னை - திருவனந்தபுரம் விமானத்திலும் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.