சென்னை: சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என அமைச்சர் சிவசங்கர் கூறியதை கண்டித்தும் அதிமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிரணியினர் 500 க்கும் மேற்பட்டோர் கருப்பு உடை அணிந்து, கைகளில் பதாகைகளை ஏந்தி இந்த வழக்கில் தொடர்புடையவராக குறிப்பிடப்படும் அந்த சார் யார் என கோஷமிட்டும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறுகையில், '' அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட ஒரு மிக மிக அவலமான நிலையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்திலும், அறிக்கையிலும், பொதுக்குழுவிலும் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார். அவர் பேசிய பேச்சு, தமிழகத்தில் மிக அதிகமாக நடக்கக்கூடிய பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கானது.
இதையும் படிங்க: 'இத்தோடு விட்டுவிடுங்கள்'.. பொள்ளாச்சியில் நடந்தது என்ன? சபாநாயகர் வழங்கிய தீர்ப்பு..!
அவர் பேச்சுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொச்சையான கருத்தை வெளியிட்டிருப்பது அதிமுகவினுடைய மகளிர்களுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக' என்று கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண் தலைவராக இருந்து நடத்திய கட்சியை பாலியல் வன்கொடுமைகளின் சரணாலயம் என்று கூறுவது மிகப்பெரிய மோசமான வார்த்தை.
ஒரு அமைச்சர் இது போன்ற பேச்சை பேசக்கூடாது. திமுக அமைச்சர்கள் பாலியல் குற்றம் செய்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு ஏன் இவ்வாறு துடிக்கிறார்கள். திமுகவின் அனுதாபி என்று சொன்னால் அமைச்சரோடு எவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொண்டார்?. அமைச்சரோடு எப்படி பிரியாணி சாப்பிட்டார்?. பாதுகாக்கப்பட்ட பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றி திரிந்திருக்கிறார் என்றால் அவருடைய செல்வாக்கு என்னவாக இருக்கிறது.
இவர்தான் அந்த சார் என்று அண்ணா நகரில் கைது செய்யப்பட்ட ஒருவரை காட்டியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் கூறிய அந்த சார் யார்?. இந்த வழக்குக்கும் அண்ணா நகர் வழக்குக்கும் என்ன சம்பந்தம். நாங்களும் பல பேரை இவர் தான் என்று காட்ட முடியும். தயவுசெய்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்'' என்றார்.