தூத்துக்குடி: கணவன் இறந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து பழகிவிட்டு ஏமாற்றிய திமுக பிரமுகர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் கண்ணன். இவர் என்.வி.கே. டிரேடரஸ் என்ற பெயரில் கடையும், இ.சேவை மையமும் நடத்தி வருகிறார். இவரது கடையில், சாயர்புரம் நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 34 வயதான கைம்பெண் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு கணவர் இறந்த நிலையில், குழந்தையுடன் பெற்றோர் பராமரிப்பில் வசித்து வந்த அப்பெண்ணிடம் கண்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருங்கி பழகி உள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறிய கண்ணன் அப்பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உறவில் இருந்து திடீரென பின்வாங்கிய கண்ணன், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பெரியார் எழுதிய நூல்களை ஏன் அரசுடமை ஆக்காமல் இருக்கிறார்கள்? - துரை வைகோ பதில் என்ன?
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்துள்ளனர். மேலும், ரூபாய் 3 லட்சம் வாங்கிக் கொண்டு போலீசில் புகார் அளிக்காமல் சென்றுவிட வேண்டும் என அப்பெண்ணை கண்ணன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட்ஜானிடம் பாதிக்கப்பட்ட பெண் நேரில் சென்று மனு அளித்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், ஏமாற்றுதல், திருமணம் செய்து கொள்வதாக பாலுறவில் ஈடுபடுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திமுக பிரமுகரான கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.