தமிழர்களின் பாரம்பரியமான கொண்டாட்டங்களில் மிகவும் முக்கியமானது அறுவடை திருநாளாம் பொங்கல். ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும் உணவுக்கு காரணமாக இருக்கும் உழவுத் தொழில், கால்நடை மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக வழிபடுவதை, நாம் பொங்கலாகக் கொண்டாடுகிறோம். தை முதல் நாளை பொங்கல் பண்டிகையான கொண்டாட்டப்படும் நாட்களில், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு சடங்கு சம்பிரதாயங்களுடன் மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த விழாக்களின் பெயர்கள் என்ன? எங்கு எப்படி கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
மகர சங்கராந்தி (Makar sankranti): மகரம் என்பது சமஸ்கிரதத்தில் தமிழ் மாதங்களில் தை மாதத்தை குறிக்கின்றது. தை முதல் நாளில், தனுசு ராசியில் இருக்கும் சூரிய பகவான் மகர ராசிக்கு இடம்பெயர்ந்து செல்வதை 'மகர சங்கராந்தி' (Makar sankranti) எனும் பெயரில் பல மாநிலங்கள் கொண்டாடுகின்றன. ஆந்திரா, தெலங்கானா, குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் நாளில் தமிழகத்தில் செய்யப்படும் சடங்குகளை போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் வண்ணமயமான பட்டங்களை வானத்தில் பறக்க விட்டு கொண்டாடுகின்றனர். மகாராஷ்டிராவில், கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட வெல்லத்தை பயன்படுத்தி இனிப்பு செய்து கொண்டாடப்படுகிறது.
லோஹ்ரி (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருவிழா லோஹ்ரி (Lohri) என்ற பெயரில் ஆண்டுதோறும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். பொங்கலுக்கு முந்தைய நாள் இரவில், குடும்பத்தினர்களும் நண்பர்களும் எரியும் நெருப்பைச் சுற்றி கூடி, நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, பாங்க்ரா நடனமாடி கொண்டாடுவார்கள். எள், வெல்லம் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை நெருப்பில் வீசுவது அவர்களது சடங்கில் ஒன்று. அதை தொடர்ந்து அவர்களது பாரம்பரிய உணவான மக்கி டி ரொட்டி மற்றும் சர்சன் டா சாக் ஆகியவற்றை செய்தும் உண்பது வழக்கம்.
மாக் பிஹு (அஸ்ஸாம்): மாக் பிஹு (Magh Bihu) அல்லது போகாலி பிஹு என அழைக்கப்படும் அஸ்ஸாமின் அறுவடை திருவிழாவில், நெருப்பு மற்றும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அறுவடை பருவத்தின் முடிவை மாக் குறிக்கிறது. பொங்கலுக்கு முந்தைய நாளில், குடும்பங்கள் ஒன்றுகூடி, மூங்கிலை பயன்படுத்தி தற்காலிய குடிசைகளை வயல்களில் அமைக்கின்றனர். பின்னர், எள், லட்டு, மீன், அறுவடை செய்த அரிசி என பலவகையான உணவுகளை உண்டு மறுநாள் காலையில் குடிசைகளை எரித்து கொண்டாடுகின்றனர்.
சுக்கி ஹப்பா (கர்நாடகா): கர்நாடாகாவில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாவில் (Suggi Habba) பாரம்பரியங்கள் மற்றும் சமூக கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் தங்கள் காளைகளையும் மாடுகளையும் வண்ணமயமான ஆபரணங்களால் அலங்கரிக்கின்றனர். பட்டம் விடுவது, பாரம்பரிய நடனமாடி மகிழ்வது மற்றும் உணவுகள் இந்த திருவிழாவில் முக்கிய பங்காக இருக்கிறது.
கிச்டி (உத்திரப் பிரதேசம்): அலகாபாத், ஹரித்வார், வாரணாசி என பரவும் கங்கை நதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர முங்கி குளிப்பார்கள். உத்திரப் பிரதேசத்தில், அறுவடை திருநாள் கிச்டி (Khichdi) என அழைக்கப்படுகிறது. கங்கை நதியில் குளிப்பதால், பாவங்கள் தீமைகள் எல்லாம் நீங்கி நன்மை நடக்கும் என நம்பப்படுகிறது. பலகாரத்தில் லட்டும் கொண்டாட்டதில் பட்டம் விடும் போட்டி முக்கிய நிகழ்வாக இருக்கிறது.
இதையும் படிங்க: 2025ல் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கோயில்கள்..தமிழ்நாட்டிலயே 3 இருக்கு!