சென்னை: பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025ம் ஆண்டு கொண்டாட்டம் மற்றும் விநியோகஸ்தர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ('FEMI 9 MEGA CELEBRATION - 2025') மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழா மேடையில் பேசிய நயன்தாரா, "மதுரையில் இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது எனது கணவர் பிறந்து வளர்ந்த ஊர். இந்த விழாவில் நிறுவனத்தில் வேலை செய்யக்கூடிய நீங்கள் எல்லோரும்தான் ஸ்டார். உங்களை கொண்டாடுவதற்குதான் நாங்கள் வந்திருக்கிறோம். இவ்வளவு பெண்களை ஒரே இடத்தில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
இங்கே தன்னம்பிக்கை உரைகளோ அறிவுரைகளோ உங்களுக்கு தேவையில்லை. ஏனென்றால் நீங்களே இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விஷயங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த இரண்டு விஷயங்களில் ஒன்று தன்னம்பிக்கை, மற்றொன்று சுயமரியாதை. என்ன நடந்தாலும், யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் நாம் விட்டுவிடக்கூடாது.
இதை நீங்களும் பின்பற்றினால் வாழ்க்கை மிக அழகாக இருக்கும் என நான் நம்புகிறேன். நமக்கு நம் மீது தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இருந்தால் அதைவிட பெரிய விஷயம் வேற எதுவும் கிடையாது. அந்த தன்னம்பிக்கை நம்மிடையே வர வேண்டுமென்றால் யார் என்ன சொன்னாலும், நம்மளை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், காலையில் எழுந்தவுடன் நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய வேலையை உண்மையாகவும் நேர்மையாகவும் தொடர்ச்சியாகவும் செய்ய வேண்டும்.
அந்த தன்னம்பிக்கை நமது வாழ்க்கையை இன்னும் அழகானதாக மாற்றி விடும். அதனால் எப்போதும் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் இழந்து விடாதீர்கள். உண்மையும் உழைப்பும் உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்” என்றார்.
இதையும் படிங்க : ’புஷ்பா 2’ பட வசூலை முறியடித்ததா ’கேம் சேஞ்சர்’?.. முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?
முன்னதாக நிகழ்வில் பேசிய விக்னேஷ் சிவன், “பெண்கள் எவ்வளவு சுதந்திரமாக வலிமையாக இருக்க முடியும் என்பதை அம்மா, பாட்டி என நம்முடைய வீடுகளில் இருக்கும் பெண்களைப் பார்த்துதான் உத்வேகம் பெறுவோம். எனக்கு எனது அம்மாதான் அந்த உத்வேகத்தை கொடுத்தார். பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை ஆண்கள் உணர வேண்டும். அதே மாதிரி உங்களுடைய வீடுகளில் ஊக்கமளிக்கும் அப்பா, அண்ணா எல்லோரும் என் கண்களுக்குத் தெரிகிறார்கள். முன்பைவிட இப்போது பெண்களுக்கான சூழல் மாறியிருக்கிறது” என்றார்.