சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாத் துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும், தனிப் பாதையையும் உருவாக்கியவர். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள தி கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மாணவர்கள் மத்தியில் 'இருட்டினிலே நீ நடக்கையிலே'.. என்ற பாடலை பாடி, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவ்விழாவில் பேசினார். அப்போது பேசிய அவர், "இங்கு 'தோல்வியில் இருந்து வெற்றி' அதைப் பற்றி தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன்.
எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்கத் துவங்கினேன். இப்படி தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும். நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.