திண்டுக்கல்: இந்த ஆண்டு தைப்பூசம் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம் களைகட்டியுள்ளது.
அதன்படி தைப்பூசத் திருவிழாவிற்கு முன்னதாகவே அதிகமான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். இந்நிலையில் பாதயாத்திரை வந்த இளைஞர்கள் சிலர், பழனி மலைக் கோயில் தரிசனத்திற்காக செல்லும் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் திடீரென ’கடவுளே அஜித்தே’ என்று கோஷமிட தொடங்கினர்.
பக்தர்கள் கோஷமிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் அரசியல் நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளிலும் இது போன்று கோஷமிடுவது அதிகரித்து வந்தது. இதனை தவிர்க்கும் விதமாக நடிகர் அஜித்குமார் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டார்.
நடிகர் அஜித்குமார் அந்த அறிக்கையில், பொது இடங்களில் ’கடவுளே அஜித்தே’ என்ற கோஷமிடுவது அதிகரிப்பதாகவும், இது போன்ற கோஷங்களை தவிர்க்க வேண்டும் எனவும், தன்னை ஏகே (AK) அல்லது அஜித்குமார் என்றும் மட்டுமே அழைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்தது.
அதன் பின்னர் அஜித் ரசிகர்கள் இணையத்தில் அல்லது பொது வெளியில் கோஷமிடுவதை தவிர்ந்த்து வந்தனர். இந்நிலையில் பழனி கோவிலில் பாதயாத்திரை சென்ற இளைஞர்கள் ’கடவுளை அஜித்தே’ என்று கோஷமிட்டவாறு சென்ற வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித்குமார் மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன் தன்னை உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என்றும், ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என அழைக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டனர்.
இதையும் படிங்க: 2025இல் ரிலீசுக்கு தயாராக உள்ள சிறிய பட்ஜெட் படங்கள் என்ன தெரியுமா? - SMALL BUDGET TAMIL MOVIE RELEASES
நடிகர் அஜித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்கள் அஜித், விஜய் வாழ்க என கோஷமிடுவதை தவிர்த்து, தங்களது வாழ்க்கையை பார்க்க வேண்டும் என அறிவுரை கூறினார். இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருந்த நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகிறது.