சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (NSCI), 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருதினை பெற்றுள்ளது.
இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியா (NSCI) வழங்கும் இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்ட பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறிப்பாக, சென்னை கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து பாரதிதாசன் சாலை மெட்ரோ நிலையம் வரையிலான UG-01 என்ற தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை ITD Cementation India நிறுவனம் கட்டமைத்து வருகின்றது.
CHENNAI METRO RAIL PROJECT RANKS TOP 3 IN NATIONWIDE SAFETY RECEIVES SURAKSHA PURASKAR (BRONZE TROPHY)
— Chennai Metro Rail (@cmrlofficial) January 22, 2025
Chennai Metro Rail Limited has achieved a significant milestone in safety with the prestigious Suraksha Puraskar (Bronze Trophy) at the NSCI Safety Awards 2024. This esteemed… pic.twitter.com/SH6S3vm7Ix
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரான ITD Cementation India Ltd ஆகிய இரு நிறுவனங்களும், கட்டுமான பாதுகாப்பிற்கான Suraksha Puraskar விருது மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விருது மதிப்பீட்டின்போது முதல் 3 இடங்களில் ஒன்றாக இருந்தது மற்றும் இந்தியா முழுவதும் மெட்ரோ ரயில் திட்ட பிரிவில் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெறும் ஒரே நிறுவனமாகவும் உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானம் மற்றும் செயல்பாடு முழுவதும் உயரிய பாதுகாப்புத் தரநிலைகளை பின்பற்றி, அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க உள்ளதை உறுதி செய்வதாக இந்நிறுவன நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் (தர உறுதி/தரக் கட்டுப்பாடு) பி. கவுந்தின்ய போஸ், இந்த விருதினை, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ITD Cementation India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 128 ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் 2020 ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்போதுவரை நடைபெற்று வருகிறது. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.