தூத்துக்குடி: இளம் எழுத்தாளர்கள் மற்றும் புத்தக வாசிப்போர் இயக்கம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பின் தங்கிய பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளிடம் எழுத்தாற்றலை மேம்படுத்துவது புத்தக வாசிப்பை மேம்படுத்துவது, கதை கேட்பதை ஊக்கப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில கலை இலக்கிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகளுக்கு குறும்படம், சிறுகதைகள் புனைவது, பனை ஓலையில் பொம்மைகள் மற்றும் பொருட்கள் செய்வது, படம் வரைதல், முகப்பூச்சு, பலூனில் பொம்மை செய்வது, மேக படம் வரைதல், தங்கள் மனதில் உள்ளவற்றை எழுத்தாக எழுதுவது ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட குழந்தைகள் இவைகளை செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிறைவாக குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கதைக்களம், கழுதை புத்தக வாசிப்பு திருவிழா இயக்கம், தமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி, ஆதம் கலையகம் ஆகியவை செய்திருந்தன.