கிருஷ்ணகிரி: பெங்களூருவில் இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை இருவர் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 37 வயதான பெண். இவர் கடந்த 19ம் தேதி இரவு தமிழ்நாடு அரசு பேருந்தில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருவுக்கு வந்தார். டவுன்ஹால் பேருந்து நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பேருந்துக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார்.
அப்போது அங்கு இரு ஆண்கள் வந்துள்ளனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் அவர்களிடம் எலஹங்கா செல்லும் பேருந்து எங்கு வரும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆண்கள் பேருந்து வரும் இடத்தை காண்பிப்பதாக சொல்லி, அப்பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு வலிப்பு... ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!
தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை இழுத்துச் சென்று இருவரும், அவரை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற பெண்ணை நள்ளிரவில் கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.