சென்னை: யாஷிகா ஆனந்த் நடித்த 'படிக்காத பக்கங்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவம் தான் தற்போது அனைவரிடத்திலும் பேசுபொருளாகியுள்ளது. அது இப்படத்தைப் பற்றியதில்லை. இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசிய விவகாரம் தான் அது. தற்போது சமூக வலைதளங்களில் இது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வைரமுத்து பேச்சு:இவ்விழாவில் பேசிய வைரமுத்து, "ஒரு பாடலில், இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருகிறது. இதில், என்ன சந்தேகம் உங்களுக்கு, இசை எவ்வளவு பெரிதோ மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான், அது 'பாட்டு'. ஆனால், சில நேரங்களில் மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியை விட இசை உயர்ந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்து கொள்பவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி" என்று கவிஞர் வைரமுத்து பேசியிருந்தார்.
இந்நிலையில், இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற கவிஞர் வைரமுத்துவின் பேச்சைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இசைஞானி இளையராஜாவை அவர் மறைமுகமாக சாடியதாக ஒரு சாரார் பேசத் தொடங்கினர். குறிப்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைஞராவால் தான் வைரமுத்து வளர்ந்தார் என்றும் அவர் குறித்து இனி ஏதேனும் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனால், சமூக வலைத்தளங்களில் இரண்டு தரப்பினரிடையேயான கருத்துகளால் மோதல் போக்கு வீரியம் பெற்றது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்(X Account) பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான பதிவில், "குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும். புயல் வீசத் தொடங்கிவிட்டால், ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால், நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும். மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு குயில் கூவும் போது காடும், புயல் வீசும் போது ஜன்னலும், வெள்ளத்தின் போது நாணலும் அமைதியாக இருப்பதைப் போல, மக்கள் ஒரு கவிஞனுக்காக பேசத் தொடங்கிவிட்டால், அக்கவிஞன் அமைதியாக இருப்பதே நல்லது எனவும், அதுதான் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், இளையராஜா - வைரமுத்து ஆகியோருக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு விவகாரத்தின் தனக்காக மக்கள் பேசத் தொடங்கியுள்ளதால், தான் அமைதியாக இருப்பதாகவும் விளக்கியுள்ளார். இதற்கிடையே, இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லையெனவும், அவை பொதுவாக பேசியவற்றை சிலர் தவறாக திரித்து பிரச்சனையாக மாற்றுவதாகவும் சினிமா பிரபலங்கள் பலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இளையராஜா - வைரமுத்து பிரிவுக்கு காரணம் என்ன? - இருமகா கலைஞர்கள் பிரிந்த பின்னணி! - Vairamuthu Ilayaraja Controversy