சென்னை: இயக்குநர் மணிரத்னம் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வெளியாகும் போது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நாளடைவில் படத்தில் இருக்கும் சிறப்புகள் ரசிகர்களைப் படத்தைக் கொண்டாட வைத்து விடும்.
இவரது இயக்கத்தில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் பெரும் எதிர்பார்புகளுக்கிடையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக, படத்தின் வசனங்கள், இசை, ஒளிப்பதிவு ஆகியவை ரசிகர்கள் படத்தை கொண்டாடும்படிச் செய்தது.
இதனிடையே, இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது முதல் ரசிகர் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அப்படத்திற்கு, "தக் லைஃப்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாக உருவாகி வருகிறது.
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃப்லிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.