ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை மகாநதி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அறிவியல் புனைகதை அம்சம் கொண்ட படமாக, அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே வருகிறது.
இந்நிலையில், தற்போது கல்கி 2989 ஏடி படக்குழு, படத்தின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு, நடிகர் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை ரிவீல் செய்துள்ளனர். அந்த வகையில், மகாபாரதத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான அழியாத அஸ்வத்தாமனை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அவரின் கதாபாத்திர ரிவீல் வீடியோவில், 'நான் துரோணரின் மகன்.. அஸ்வத்தாமா!' என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் இப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய இந்தியப் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் சமீபத்திய டீசர் அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்த டீசர் வீடியோ சந்தோஷ் நாராயணன் இசையில் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க:“இப்படி ஒரு கதையா?” - வெற்றிமாறனிடம் பிரமித்த ராகவா லாரன்ஸ்! - Raghava Lawrence In Adhigaram