சென்னை: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்த வீட்டுக்கு வாடகை தராமலும், யாருக்கும் தெரியாமலும் வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாகவும், அதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துபாயில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் ஆன்லைன் மூலமாக துணை ஆணையாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 6வது தெருவில் உள்ள ஃபஷீலத்துல் ஜமீலா என்பவரின் வீட்டை கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டின் மாத வாடகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் வைப்புத் தொகை ரூ.12 லட்சம் என அக்ரீமெண்ட் போட்டப்பட்டு பயன்படுத்தி வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மாத வாடகையை ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான ரூ.18 லட்சம் வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வீட்டின் உரிமையாளரிடம் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மொத்த வாடகை தொகையான ரூ.18 லட்சத்தில் ரூ.12 லட்சம் மட்டுமே காசோலையாக வீட்டின் உரிமையாளரிடம் யுவன் வழங்கியதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள ரூ.6 லட்சமும், மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரை வாடகை தொகையான ரூ.15 லட்சம் என மொத்தம் 20 லட்சத்திற்கும் மேல் வாடகை பணத்தை கொடுக்காமல் அந்த வீட்டை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.