திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 29 ந்தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை தெய்வசிகாமணி, தாய் அலமேலு மற்றும் மகன் செந்தில் குமார் ஆகிய மூவரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் 14 தனிப்படைகள் அமைத்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இதுவரை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாமல் சம்பவம் நடந்து 40 நாட்கள் கடந்த நிலையில், ஒருவர் கூட கைது செய்யப்படாமல் உள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசை கண்டித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அவிநாசி பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாஜகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, '' கொங்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வீட்டில் நகைகள் ஏதாவது கிடைக்குமா என கூலிப்படையினர் வருகின்றனர். இது போன்ற படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் பொதுவாழ்வில் இருந்து என்ன பயன். உங்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைத்து காவல் துறையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நான் காவல் துறை குறித்து தவறாக பேசவில்லை.
அரிவாள் கலாச்சாரம்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெறவில்லை. அரசுக்கு எதிராக பேசினால் வேலை கிடைக்காது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆள் பற்றாக்குறை உள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. குற்றம் நடந்த பிறகு அவர்களை பிடிக்கவும் முடியவில்லை. காவல்துறைக்கு அதிகாரம் கொடுங்கள்; புதிதாக ஆட்களை சேருங்கள். தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற கோரி டிசம்பர் 6ம் தேதி முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். அரசியல் இல்லாமல் கடிதம் எழுதினேன்.
வேட்டையாடுவோம்
சிபிஐ ஒரு வழக்கில் தீர்வை காண 65 சதவீதம் வாய்ப்பு உள்ளது. காவல் துறைக்கு 27 சதவீத வாய்ப்பு தான் உள்ளது. அடுத்த 20 நாட்களில் பொங்கலூர் ஒன்றியத்தில் 50,000 கையெழுத்து பெற்று ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணை கோர உள்ளோம். முதல்வருக்கு அனுப்பிய கடித்தத்திற்கு பதில் இல்லை. குற்றவாளிகளை கண்டுபிடிப்போம், வேட்டையாடுவோம்.
ஒவ்வொரு நாள் தாமதமும் தவறு. எனவே, விரைந்து கையெழுத்து இயக்கத்தை முடிக்க வேண்டும். உள்துறை அமைச்சரை சந்தித்து சிறந்த புலனாய்வு அதிகாரியை நியமிக்க வைக்கிறேன். அண்ணா பல்கலை கழக விவகாரத்தை பாஜக விடப்போவது இல்லை. குற்றம் நடக்காத நாள் இல்லை, ஆனால் இந்த விஷயத்தை பொருத்தவரை அரசியல் கட்சி தோற்கலாம், ஆனால் சிஸ்டம் தோற்க கூடாது. தான் படிக்கும் கல்லூரியில் நடக்க அனுமதி இல்லை என்றால் ஏற்க முடியாது. அண்ணா பல்கலை சம்பவத்தில் குற்றவாளி ஒருவர்தான் என தெரிவித்த கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஞானசேகரன் குற்றவாளி பட்டியலில் இருக்க வேண்டிய நபர். அரசியல் வாதிகள் பேச்சை கேட்டு, காவல் துறை அதிகாரிகள் தவறு செய்தால் சாதாரண மனிதர்கள் எங்கு செல்வது. அரசியலுக்காக இல்லாமல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். காவல் துறையில் இருந்து எப்.ஐ.ஆர் வெளியே செல்ல கூடாது. அதற்காக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதற்காக சாட்டையடி பெற்று தான் அரசை சரி செய்ய வேண்டும் என்றால், மேலும் பல சாட்டையடி பெற தயார்'' என்று அண்ணாமலை பேசினார்.