சென்னை: திட்டம் இரண்டு, அடியே படங்களை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ஹாட் ஸ்பாட். ஆந்தாலஜி வகையில் அடல்ட் கண்டெண்ட் உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமான ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 07) நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் அமர் பேசியதாவது, "2020ல் இந்தப்படம் செய்தேன். அதுக்கப்புறம் இந்தப்படம் செய்ததையே மறந்துவிட்டேன். ரிலீஸ் போஸ்டர் பார்த்துத் தான் இதில் நடித்திருக்கிறோம் எனச் சந்தோசப்பட்டேன். ஏ சர்டிபிகேட் என்பதால் குடும்பத்தோடு போகாமல் தனியாகப் போனேன். ஆனால் பலர் குடும்பத்தோடு படத்தை ரசிக்க வந்தார்கள். ரொம்பவே சந்தோசமா இருந்தது. அடுத்த படத்திலும் வாய்ப்பு தாருங்கள் நன்றி" எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து கேஜேபி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் பாலமணிமார்பண் பேசுகையில், " பிரஸ் மீட்டில் நிறையக் கேள்விகள் பயத்தைத் தந்தது. ஆனால் பிரஸ் ஷோவிற்கு பிறகு நிறையப் பாராட்டுக்களும் வந்தது. இன்றைய அளவில் மக்கள் இந்தப்படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். உங்களுக்கு நன்றி.
விக்னேஷ் ஷார்ட்ஃபிலிம் எடுக்கும் காலத்திலிருந்து தெரியும். அப்போதே படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் புரடியூசர் ஃப்ரண்ட்லி. தயாரிப்பாளர்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வார். இடையில் விக்னேஷுக்கு அடியே படம் கிடைத்தது. அதனால் தான் இந்தப்படம் லேட் ஆனது.
விக்னேஷை சுற்றி வேலை பார்க்கும் அனைவரும் மிக அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் ஷோ ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் எல்லோருக்கும் நன்றி" என்றார்.
சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் பேசுகையில், "இது தேங்ஸ் மீட், மக்களிடம் இந்தப்படம் பேசப்படக் காரணமே பத்திரிக்கையாளர்கள் தான் நன்றி. எங்கள் படம் 11 படங்களுடன் வெளியானது. அது மிகப்பெரிய பிரஷரைத் தந்தது. ஆனால் மக்கள் எங்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள்.
இது போன்ற சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தந்தால், எங்களை மாதிரி நிறையப் பேர் படம் எடுப்பார்கள். இந்தப் படத்தின் நடிகர்களுக்கு நிறையத் தைரியம் இருக்க வேண்டும். இப்படி கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வந்ததில்லை.
விக்னேஷ் எப்படி நடிகர்களை ஒத்துக்கொள்ள வைத்தார் எனத் தெரியவில்லை. இப்படம் டிரெய்லர் வந்த போது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் படம் வந்த பிறகு அனைவரும் பாராட்டினார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் பாராட்டினால் இந்த வாரமும் இந்தப் படம் ஓடும் நன்றி. எங்கள் படத்தை ஆதரித்துப் பாராட்டியதற்கு நன்றி" என்றார்.
செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார் பேசியதாவது, "இந்தப் படம் வெற்றிபெறக்காரணம் பிரஸ் மீடியா தான். பிரஸ் மீட்டில் கேட்ட கேள்விகள் பார்த்து மிகவும் நொந்துபோய் விட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு நீங்கள் தந்த ஆதரவு மிக மகிழ்ச்சியாக இருந்தது.