சென்னை: பிரபில இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்குப் படமாக வரும் ஜனவரி 10ஆம் தேதி சங்கராந்தி அன்று வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் அன்ஜசாலி என நட்ச்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீத்தில் அந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அரசியல் பின்னணியை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது எனலாம். மேலும் இந்த படம் இரண்டரை ஆண்டுகள் கழித்து வெளிவரும் ராம்சரண் படம் என்பதால் பெரும் எதிர்பார்பிற்கு உள்ளாகியுள்ளது.
இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் நடைபெற்ற படத்தின் முன்வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், "இப்போது இருக்கும் தலைமுறையினர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பத்து நிமிடங்களுக்குள் படத்தைப் பற்றி செல்போனில் வளைதளங்களில் பதிவிடுவது, மெசேஜ் செய்வது என கவனம் சிதறுபவர்களாக இருக்கிறார்கள்.
பத்து நிமிடங்களுக்கு மேல் அவர்களால் ஒரு படத்தை ஒன்றி பார்க்க முடிவதில்லை. ஆனால், கேம் சேஞ்ச்சர் அப்படி இல்லை. நீங்கள் எங்கும் தலையை திருப்பக்கூட முடியாது. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக படத்தை உருவாக்கியுள்ளோம்" என கூறியிருந்தார்.
இதுகுறித்து பிரபல பாலிவுட் இயக்குநரும், தமிழில் இமைக்கா நொடிகள் போன்ற படத்தில் நடித்த நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்ட்டரின் இந்திய பதிப்பிற்கு கொடுத்த பேட்டியில் கூறும்போது, “ஷங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குநர் இது போன்று பேசுவது வருத்தமளிக்கிறது. கேம் சேஞ்ச்சர் விழாவில் இப்போதிருக்கும் பார்வையாளர்களின் கவனிக்கும் திறன் மிகவும் குறைந்துவிட்டதாகவும், ரீல்ஸ்களை பார்ப்பதாகவும் அதற்கு ஏற்றவாறு படத்தை உருவாக்கியிருப்பதாகவும் கூறியிருப்பது, மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இதையும் படிங்க: புத்தாண்டு சிறப்பு வழிபாடு.. திருத்தணி முருகனை தரிசித்த நடிகர் யோகி பாபு!
அவர் மட்டுமல்ல இப்போது இருக்கும் பல இயக்குநர்களும் இந்த சமூக ஊடகங்களின் தாக்கங்களுக்கு ஏற்றவாறு படம் எடுப்பதாக கூறுகிறார்கள். என்னுடைய படங்கள் ரீல்ஸ்களை பார்ப்பது போல இருக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள். ரசிகர்கள் என்ன பார்க்க நினைக்கிறார்களோ அதைக் கொடுப்பது என்பது கேட்க்கும் உணவை பரிமாறுவது போன்றது.
அதே நேரம் அவர்கள் கேட்காத உணவை அற்புதமாக சமைத்து தருபவர்கள்தான் சமையற்கலை நிபுணர்களாக அறியப்படுவார்கள். அத்தகைய சமையற்கலை நிபுணர்களை போல்தான் முன்பொரு காலத்தில் இயக்குநர்கள் இருந்தார்கள்" எனக் கூறியிருந்தார்.
மேலும் பாலிவுட்டின் தற்போதைய நிலையை கடுமையாக விமர்சித்த அனுராக் காஷ்யப் கூறுகையில், "பாலிவுட்டின் தயாரிப்பாளர்கள் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு முன்பே லாபத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். அத்திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்வது என்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.
இது படத்தை இயக்கும்போது இருக்கும் மகிழ்ச்சியை ஒழித்து விடுகிறது. மேலும், புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பதில்லை. அதேநேரம் ரீமேக்குகளுக்கு அதிக பணம் கொடுக்க தயாராக உள்ளனர். அதனால்தான் தென்னிந்தியா படங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். இங்குள்ளவர்களின் இத்தகைய எண்ணத்தை நினைக்கும்போது அருவருப்பாக உள்ளது" எனத் தெரிவித்தார்.