தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஒத்த ஓட்டு முத்தையா; தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய கவுண்டமணி! - Goundamani Otha Ottu Muthaiya movie

Goundamani Otha Ottu Muthaiya movie: அரசியல் நையாண்டியாக உருவாகி வரும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்திற்கு கவுண்டமணி தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Goundamani Otha Ottu Muthaiya movie
Goundamani Otha Ottu Muthaiya movie

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 6:36 PM IST

சென்னை:சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

சென்னையில் உள்ள பரணி டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும், அவருடன் நெருக்கமாக பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.

கவுண்டமணிக்கும், யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும் என்றும் இயக்குநர் சாய் ராஜகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவரும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்குப் பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படும் என்று தெரிவித்த இயக்குநர், இரு நடிகர்களும் தங்கள் காட்சிகளை மிகவும் ரசித்ததாக கூறினார். ஒட்டுமொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும், ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலகப் பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய, அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து, தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் 2024 - 2026; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

ABOUT THE AUTHOR

...view details