சென்னை:வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்', செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர்.
ரூ.400 கோடிக்கு மேல் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள கோட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யுடன் இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை வெளியாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்: கோட் திரைப்பட சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் படம் வெளியாவதற்கு முன்னரே அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக, ஆந்திரா மற்றும் தெலங்கான உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4.30 மணிக்கே திரைப்படம் வெளியானது. இதனால் அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.