சென்னை:'பவர் பாண்டி' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள ''ராயன்'' படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பாடியுள்ள, ‘அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம்’ எனும் முதல் பாடல் இன்று (மே.09) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் தனது திறமையால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
குறிப்பாக, இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது 50வது படமான ''ராயன்'' படத்தைத் தானே இயக்கி நடித்தும் வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் 'ராயன்' படத்தில் எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், அபர்ணா முரளி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதியுள்ள ‘அடங்காத அசுரனோட ஆட்டம் ஆரம்பம்’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ளனர்.
மேலும், இப்படம் இந்தாண்டு ஜூன்.13 ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள இரண்டாவது படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் முதன்முதலில் இயக்கிய 'பவர் பாண்டி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ராயன்' படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் 'குபேரா' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அதன் பின்னர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் உருவாகும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இயக்குநர் வசந்த பாலனின் "தலைமைச் செயலகம்" புதிய சீரியஸின் டிரெய்லர் வெளியீடு.. - Thalaimai Seyalagam Trailer