சேலம்: சாலையில் தனியார் பேருந்துக்கு வழி விடாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதைக் கேட்ட, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து நேற்று (ஜன.22) இரவு தனியார் பேருந்து ஒன்று சின்ன கடை வீதி வழியாகப் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவர் ஓட்டுநராகவும், பூபாலன் என்பவர் நடத்துநராகவும் பணியில் இருந்தார்.
அப்போது, பேருந்துக்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் வழி விடாமல் சென்றதாகவும், ஒரு இடத்தில் பைக்கை தனியார் பேருந்து முந்திச் சென்ற நிலையில், "ஹாரன் அடித்தால் வழிவிட மாட்டீர்களா" என நடத்துநர் பூபாலன் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பஸ் பேருந்து நிலையத்திற்கு வந்த சிறிது நேரத்தில் ஐந்து பேருடன் வந்து, ஓட்டுநர் கோகுல் மற்றும் நடத்துநரிடம் தகராறு செய்ததும் மட்டுமின்றி, பேருந்துக்குள் சென்று அவரை ஒருமையால் திட்டி சரமாரியாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் மெத்தனால் பறிமுதல்!
தற்போது, அந்த கும்பல் தாக்கியதில் காயமடைந்த ஓட்டுநர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார். பின்னர், இந்த தாக்குதல் தொடர்பாக டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பேருந்துக்குள் சென்று ஓட்டுநரைத் தாக்கும் காட்சி, அப்பேருந்துக்குள் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.