திருப்பூர்: பின்னலாடை துறைக்கு தனி வாரியம், எளிய முறையில் வங்கி கடன் உதவி, புதிய தொழில்நுட்பத்திற்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருப்பூர் தொழில் துறையினர் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உற்பத்தி செலவு அதிகம்: பின்னலாடை ஏற்றுமதி மூலமாக திருப்பூர் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது மேலும் உள்நாட்டு பனியன் உற்பத்தியில் 30 ஆயிரம் கோடி என 70 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு வர்த்தகம் செய்யும் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக மூலப் பொருளான பருத்தி ஏற்றுமதி காரணமாக நூல் விலை கடுமையான உயர்வை சந்தித்தது இதன் காரணமாக உற்பத்தியாளர்கள் செயற்கை இழைகளுக்கு மாற துவங்கினர். மேலும் செயற்கை இழைகள் சீனா மற்றும் வட மாநிலங்களில் இருந்து வர வேண்டிய சூழ்நிலையில் உற்பத்தி செலவு அதிகம் பிடித்து உள்நாட்டு வர்த்தகம் பெருமளவு சரிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடங்களாக பின்னலாடை மீண்டும் ஏற்றம் காண துவங்கி உள்ளது, குறிப்பாக பங்களாதேஷ் நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பில் கடந்த ஆண்டை போல் இல்லாமல் ஜவுளி தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும் என எதிர்பார்த்து தொழில் துறையினர் காத்திருக்கின்றனர்.
ஊக்கத்தொகை தேவை: ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம்,"வருகின்ற நிதிநிலை அறிக்கை தொழில் துறைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கின்றோம். வட்டி மானியம் வழங்கிட வேண்டும், தற்போதுள்ள காலகட்டத்தில் புதிய தொழில் நுட்பம் வந்துள்ளதால் இயந்திரங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் பிற நாடுகளோடு போட்டி போட முடியும். செயற்கை இழையில் உற்பத்தியாகும் ஆடைகளுக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் தனி கவனம் செலுத்த வேண்டும், பசுமை தொழிற்சாலைகளை ஊக்கவிக்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு வீடு மற்றும் விடுதிகள் கட்டுவதற்கு உதவ வேண்டும், இதை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று நம்புகின்றேன்,"என்றார்.
மேலும் நம்மிடம் பேசிய திருப்பூர் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம்,"2025 மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்த ஜவுளி துறையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித்துறை பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சிறப்பு நிதி கொள்கை: இந்தியாவில் மூலப்பொருள் அதிகமாக உள்ளது அதேபோன்று தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ளனர் இருந்த போதிலும் ஜவுளி துறையில் உலக அளவில் ஆறாவது இடத்தில் தான் உள்ளோம், இது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு முக்கிய காரணம் அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை, இதற்கு முன்பு ஒரு சதவீதம் மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் தனி கவனம் செலுத்தி அதிக நிதி ஒதுக்க வேண்டும். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி தொழில்தான் சிறந்து விளங்குகிறது,
தற்பொழுது வங்கதேசத்தின் ஆர்டர்கள் இந்தியா நோக்கி வரத் தொடங்குகிறது. இதை நாம் தக்க வைக்க வேண்டும் என்றால் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். சிறப்பு நிதி கொள்கை வேண்டும். குறைவான வட்டி விகிதத்தில் எளிமையான முறையில் கடன் வழங்க வேண்டும். ஜவுளித்துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். இதுபோன்ற சிறப்பு சலுகைகள் வழங்கக்கூடிய பட்ஜெட்டாக அமைய வேண்டும்,"என்றார்.