சென்னை:கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சர்தார் 2 படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
அப்போது எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை (54) பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக ஏழுமலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 35 வருடங்களாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஏழுமலை உயிரிழந்தது சர்தார் 2 படக்குழுவினர் மற்றும் தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, சர்தார் 2 படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று (ஜூலை 25) ஒருநாள் சென்னையில் நடைபெறவிருந்த 32 படங்களின் படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.