சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா, திடீர் உடல் நலக்குறைவால் கடந்த 2023 ஜனவரி 4-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு நடந்த இடைத் தேர்தலில், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரும் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14-ம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இங்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மீண்டும் கொடுக்கப்படுமா? அல்லது திமுகவே போட்டியிடுமா? என்ற குழப்பம் கடந்த சில நாட்களாக நிலவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் திமுக போட்டியிடும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வேட்பாளராக வி.சி.சந்திரகுமாரை திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
வருகிற 05-02-2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.கழக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, வி.சி.சந்திரகுமார் (தி.மு.க. கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) போட்டியிடுவார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.