சென்னை :இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யாப், கிஷோர், கென் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 'விடுதலை பாகம் 2' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி விடுதலை பாகம் 2 வரும் டிச 20 தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று( நவ 26) 'விடுதலை பாகம் 2' ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, கென் மற்றும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் இயக்குநர் வெற்றி மாறன் பேசுகையில், "ஒரு படம் எடுக்க நிறைய உழைப்பு தேவை. அது ஒருசிலர் மீது மற்றவர்கள் கண்மூடித்தனமாக வைத்துள்ள நம்பிக்கை. நான்கு வருடங்களாக ஒரு படத்தில் மேடு பள்ளம் உள்ளது.
இப்படத்தில் நடிக்க வந்தவர்கள் திருமணமாகி அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். எல்லோருமே இந்த பயணத்தை மனப்பூர்வமாக செய்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரொம்ப நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இதுபோன்ற டீம் எங்கேயும் பார்க்க முடியாது.
இதுபோன்ற ஒரு டீம் இல்லை என்றால் என்னால் இயக்குநர் என்று பெயர் வாங்க முடியாது. எல்லோரும் எனக்கு உதவி செய்கிறார்கள். இளையராஜா பத்து நிமிடத்தில் நான்கு டியூன் ரெடி பண்ணி வைத்திருப்பார். இளையராஜா நிறைய நியாபகத்துடன் கூர்மையாக வேலை செய்பவர். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு பற்றி இளையராஜாவுக்கு கவலையில்லை. படத்துக்கு என்ன வேண்டுமோ அதுதான். அவரின் மியூசிக்கல் ஜீனியஸ் மைண்ட்டை பக்கத்தில் இருந்து பார்த்தது ரொம்ப சந்தோஷம். அவருடன் பணியாற்றியது எனது தனிப்பட்ட விதத்தில் உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தது.
விஜய் சேதுபதியை எட்டு நாட்கள் நடிக்க அழைத்தேன். ஆனால் 120 நாட்கள் நடித்தார். விஜய் சேதுபதியின் ஈடுபாடு இந்த படத்துக்கு உதவியாக இருந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விடுதலை தான் வாத்தியார்.
படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது முடிப்பதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். இப்படத்தின் பின்னணி இசை பணியை பார்க்க ஆசையாக உள்ளேன். 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதுவும் படப்பிடிப்பை நிறுத்துகிறேன் என்று தான் சொன்னேன் முடித்துக்கொள்கிறேன் என்று சொல்லவில்லை. மஞ்சு வாரியர் மூன்று காட்சிகள் என்று சொல்லித்தான் அழைத்தேன். இரண்டு பாடல்கள் உள்ளது. இந்த கதாபாத்திரம் உண்மையில் ஸ்பெஷலான ரோல்தான்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்