புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா எம்பி-யாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக இன்று (சனிக்கிழமை) தனது தொகுதியான கேரளாவில் உள்ள வயநாடுக்கு வருகை தர உள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தொடர அவர் ஏதேனும் ஒரு தொகுதியை கைவிடும் சூழல் இருந்ததால், வயநாடு தொகுதியி்ன் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி காலியானது. இதனால் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதையும் படிங்க: கட்டுப்பாடு விதித்த மேற்கு வங்கம்; உருளைக்கிழங்கு வரத்து இல்லாமல் தவிக்கும் ஒடிசா..!
இதனால் கடும் மும்முனை போட்டி நிலவியது. ஆனால், காங்கிரஸின் கோட்டையான வயநாட்டில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) சத்யன் மொகேரியைத் தோற்கடித்தார். அதனை தொடர்ந்து நவம்பர் 28 அன்று எம்பி-யாக பதவியேற்றார்.
இந்நிலையில், எம்பி-யாக பதவியேற்றுள்ள அவர் முதன்முறையாக இன்று வயநாடுக்கு வருகை தர உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் பிரியங்கா காந்தியுடன் அவரது சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டுக்கு வரும் இவர்கள் கருளை, வண்டூர் மற்றும் எடவண்ணா ஆகிய இடங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். அதனை தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டம் திருவம்பாடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள முக்கத்தில் நாளை மறுநாள் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.