கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் டைகர் பள்ளத்தாக்கிற்கு இடைப்பட்ட சாலையில் காட்டு யானை நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியை யானை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர்பால்ஸ் டைகர் பள்ளத்தாக்கிற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (பிப்.4) மாலை 6 மணியளவில் ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்துள்ளது.
அப்போது, அந்த வழியாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஜூர்சன் வால்பாறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு பொள்ளாச்சி செல்வதற்காக டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒற்றைக்காட்டு யானை நிற்பதாக எச்சரிக்கை செய்தும், எச்சரிக்கையைக் கேட்காமல் மைக்கேல் ஜூர்சன் (வயது 71) சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜெர்மனி நபரைக் கண்ட யானை வேகமாக வந்து தாக்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. யானை தாக்கியதில் மைக்கேல் ஜூர்சனுக்கு கால் மற்றும் கைகளில் வெளிப்புற காயங்கள் ஏற்பட்டன. மேலும், யானை மைக்கேல் ஜூர்சனை இருசக்கர வாகனத்தோடு தூக்கி எறிந்ததால், இருசக்கர வாகனமும் சேதமடைந்துள்ளது.
மேலும், யானை தாக்கியதில் காயமடைந்த மைக்கேல் ஜூர்சனை அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் பார்த்த நிலையில், அவரை மீட்டு உடனடியாக வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி பெற்றதை அடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலை முடிந்து வீடு திரும்பிய பெண் கூலித் தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு!
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டு யானை கடந்த ஒரு மாத காலமாக இந்த சாலை அருகே சுற்றித் திரிவதால் சாலையில் செல்வதற்கே அச்சமாக உள்ளதாகவும், காட்டு யானையை வனத்துறையினர் உடனடியாக காட்டுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறையைச் சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டுப் பயணி, யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.