சென்னை: நந்தன் மற்றும் கொட்டுக்காளி படங்களை பார்த்து விட்டு இயக்குநர் தங்கர் பச்சான் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரைப்படத் திறனாய்வு என்பது தமிழ்நாட்டில் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. திரைப்பட கலை மக்களைச் சென்றடைந்து 110 ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் கூட அதை நாம் பொழுது போக்கிற்காக, நடிகர்களின் முகத்துக்காக மட்டுமே பார்க்கப்படும் கலையாக சுருக்கி வைத்திருக்கிறோம்.
மக்களிடத்தில் தாக்கத்தை உருவாக்கி, சமூக மாற்றங்களுக்காக இயங்கி, மக்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய திரை கலை, தமிழகத்தில் அந்தப் பணியை செய்திருக்கிறதா? செய்திருந்தால், நடைமுறைக்கு ஒவ்வாத மக்களின் சிந்தனையை அழித்து, பின்னோக்கி இழுத்துச் செல்லும் வணிகக் குப்பைத் திரைப்படங்களை மக்கள் கொண்டாட மாட்டார்கள். இந்த வணிகக் குப்பைத் திரைப்படங்களின் வசூல் குறித்துக் கணக்கெடுக்கும் வேலையை செய்ய மாட்டார்கள்.
இயற்கை, மண், மக்கள் குறித்து அக்கரை கொண்ட அரசியல்வாதிகளை, வளர்த்தெடுக்கத் தவறியதுபோல் தேர்ந்த திரைப் படைப்பாளிகளையும், படைப்புகளையும் வளர்த்தெடுக்க தவறி விட்டோம். சீர்கெட்டுப்போன வணிகத் திரைச் சந்தைகளுக்கிடையில் தப்பித்து ஒன்றிரண்டு தரமான படைப்புக்களும், கலைஞர்களும் உருவாவது அவ்வப்பொழுது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
அண்மையில் நான் கண்ட இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் குறித்துச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன். பல குழுக்கள் பின்னாலிருந்து இயங்கி மக்களின் மூளையை மழுங்கச் செய்து பணத்தைக்கொட்டி கூட்டத்தைத் திரட்டாத திரைப்படங்கள் இவைகள். விடுதலைக்குப்பிறகு மக்களாட்சி முறையில் தலித் மக்களுக்குக் கிடைத்த சமூக நீதியின்படி தலித் சமூகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் அமர்ந்தாலும் அவர்கள் செயலாற்ற முடியாத, இந்தியாவெங்கிலும் உள்ள கள நிலையைப் பற்றி 'நந்தன்' திரைப்படம் குமுறுகிறது.
தனித் தொகுதிகள் உருவாக்கியும் அதிகாரத்தை அனுபவிக்க முடியாத பட்டியலின மக்களின் அவல அரசியல் நிலைமையைப் பேசுகிறது. தற்பொழுது எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசிய 'நந்தன்' தலித் ஆதரவாளர்களாலும், தலித் தலைவர்களாலும், ஊடகங்களாலும் மக்களுக்கு அறிவுறுத்தப்படாமல் அமைதி காத்ததன் காரணம் புரியவில்லை.
அறமும், கடமையும் அடிப்படையாகக் கொண்ட பத்திரிக்கையாளர் இரா.சரவணன் எழுதி இயக்கி தயாரித்துள்ள இத்திரைப்படம் பின்வரும் காலங்களில் பேசப்படும் என்றாலும், இப்பொழுது முதலீட்டைக்கூட ஈட்ட முடியாமல் போனதற்கு யார்தான் காரணம்? மக்களின் பணம் ஒன்றையே குறி வைத்து தொழில் செய்யும் நடிகர்களும், தயாரிப்பாளர்களும் இது போன்ற சமூகத்திற்குத் தேவையான படைப்புகளை உருவாக்க வர மாட்டார்கள். அதுதான் என்னை இதை எழுத வைத்திருக்கிறது.