சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் திடீரென உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் இறந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் தலைமை சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் தலைவர் பிரேம் நாத், செயலாளர் எல்.கே.அந்தோணி, பொருளாளர் எம்.ஜி.ஆர்.இக்பால் ஆகியோர் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்காக நினைவஞ்சலி கூட்டம் நடத்தினர்.
மேலும், மறைந்த காமெடி நடிகர் போண்டா மணி மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டமும் நடத்தினர். இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, அரவிந்தராஜ், செந்தில்நாதன், பாரதி கணேஷ், நடிகர்கள் முத்துக்காளை, பெஞ்சமின், சாரப்பாம்பு சுப்புராஜ், வெங்கல் ராவ், ஜூலி பாஸ்கர், ஜெய சூர்யா, ராஜ் காந்த், சிவகுமார், லொள்ளு சபா ஜீவா, சிவன் சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.