சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில் விரைவு தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் அறிவுறுத்தி வந்த நிலையில், இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி சார்பில் அந்த கிராமத்தை சேர்ந்த பலரிடம் டிஎன்ஏ பரிசோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது வேங்கைவயல் வழக்கில் தொடர்பு இருப்பதாக வேங்கைவயலை சேர்ந்த முரளி ராஜா, சுதர்சன், ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? தமிழக அரசே வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்று அல்லது சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்திடுக!! வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.