சென்னை: ’கங்குவா’ திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பலர் விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர்கள் இரா. சரவணன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளனர். சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு படக்குழுவினர் உலகம் முழுவதும் சென்று விளம்பரம் செய்தனர்.
மேலும் இப்படத்தின் ப்ரமோஷன்களில் சூர்யா சினிமா கலைஞர்கள் 'இப்படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள்' எனவும், ஞானவேல் ராஜா இப்படத்திற்கு 2000 கோடி வசூல் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்நிலையில் கங்குவா திரைப்படம் வெளியானது முதல் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி நெட்டிசன்கள் கங்குவா படக்குழுவை மீம்ஸ்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் சூர்யா, சிவா ஆகியோர் மீது தனிப்பட்ட தாக்குதல்களையும் செய்து வருகின்றனர்.
இதனிடையே சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்தின் முதல் அரைமணி நேரம் நன்றாக வரவில்லை, சத்தம் இரைச்சலாக உள்ளது என்றும், ஆனால் அதற்காக படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் அளிப்பது தவறானது என எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நந்தன் பட இயக்குநர் இரா.சரவணன், இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
இரா.சரவணன் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல்வாதிகள் தவறு செய்யும் போது நாம் கேள்வி கேட்பதில்லை. ஆனால் சினிமாக்காரர்கள் மீது கொந்தளிக்கின்றனர்" எனவும் மேலும், "சினிமாகாரர்களை இந்தளவுக்குக் கொண்டாடவும் தேவையில்லை. இவ்வளவு மோசமாகக் குறை சொல்லவும் தேவையில்லை. இந்தக் கோபத்தை ஆவேசத்தை தட்டிக் கேட்கும் தைரியத்தை சினிமாவுக்கு எதிராக மட்டும் காட்டாமல், நம்மை ஏமாற்றும் அத்தனை அநீதிகளுக்கு எதிராகவும் காட்டுவோம். சினிமா நம் பொழுதுபோக்கு. பொழுது அதைவிட முக்கியம்.