சென்னை:சமீபத்தில் டெல்லியில், 50 கிலோ 'சூடோபெட்ரின்' என்ற போதைப் பொருளை கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி காவல்துறையுடன் இணைந்து கைது செய்தனர். இந்த கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதன் தொடர்ச்சியாக, பிடிபட்டவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இவர்கள் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டது, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப் பெரியவன், கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை, வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில், தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், தனது பெயரும் அடிபடுவது பற்றி, இயக்குநர் அமீர் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.