சென்னை: 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதியாக கூறியுள்ளார். பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'துணிவு'. இப்படத்திற்கு பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு அஜித்குமார் விக்னேஷ் சிவன் படத்தில் கமிட்டானார். ஆனால் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், மகிழ் திருமேனி அஜித் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
முதலில் இப்படத்தின் ஷூட்டிங் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் பட அறிவிப்பு வெளியானது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ’விடாமுயற்சி’ என தலைப்பிடப்பட்ட படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் மெதுவாக நடைபெற்ற நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடைபெற்றது. மேலும் அப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே பொங்கல் வெளியீடு என படக்குழு தெரிவித்தது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து விடாமுயற்சி படக்குழுவும் பொங்கல் வெளியீடு என அறிவித்ததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். விடாமுயற்சி படக்குழு தொடர்ச்சியாக அப்டேட் வெளியிட்டு வந்தாலும், அப்படக்குழு கடைசி வரை படப்பிடிப்பு நடத்தி வந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
அவர் சென்னை விமான நிலையத்தில் நேற்று (டிச.30) அளித்த பேட்டியில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். முதலில் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகிறது. அதற்கு பிறகு குட் பேட் அக்லி வெளியாகும்" என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடைசியாக அனிருத் இசையமைப்பில் விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் சவாதீகா, வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க:’சர்தார் 2’ முதல் ’ஜெயிலர் 2’ வரை... 2025இல் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் 'பார்ட் 2' படங்கள் என்ன? - TAMIL CINEMA SEQUELS 2025
நாளை (ஜன.1) புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. வரும் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படத்துடன் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர், பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் ஆகிய படங்கள் வெளியாகிறது.