தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சினிமாவிற்கு குட்பை சொல்லும் விஜய், வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா... சினிமா வல்லுநர்கள் கருத்து என்ன?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்கள் வர்த்தக நிலவரம் குறித்தும், விஜய் சினிமாவிலிருந்து விடை பெறுவதால் வெற்றிடத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து சினிமா வல்லுநர்கள் கூறும் கருத்துகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

விஜய் சினிமாவிலிருந்து விடை பெறுவதால் வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா
விஜய் சினிமாவிலிருந்து விடை பெறுவதால் வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 8, 2024, 11:25 AM IST

சென்னை: ஒவ்வொரு விஜய் படத்தின் அறிவிப்பையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் ’தளபதி 69’ பட அறிவிப்பை ரசிகர்கள் இது கடைசி படம் என்ற ஏக்கத்துடன் வரவேற்றனர். விஜய்யின் அரசியல் பயணம் காரணமாக அவருக்கு சினிமாவிலிருந்து பிரியா விடை கொடுக்க மனமில்லாமல் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு உச்ச நடிகரின் வெற்றிகரமான காலகட்டம் முடியும்போது, அடுத்த சூப்பர் ஸ்டார் உருவெடுப்பது வழக்கம். ரஜினிகாந்த் கமர்ஷியல், மாஸ் படங்களின் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இன்று வரை தொடர்கிறார். அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இருந்தே விஜய் தமிழ் திரையுலகில் வளரும் நடிகராக வலம்வந்தார்.

விஜய் பட வசூல் நிலவரத்தை துப்பாக்கி படத்திற்கு முன், துப்பாக்கிக்கு பின் எனப் பிரிக்கலாம். அந்தளவிற்கு விஜய் திரை வாழ்வில் துப்பாக்கி திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படம், தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்ததாக, விஜயை வசூல் மன்னனாக மக்கள் மனதில் நிலைநிறுத்தியது. அதற்கு பிறகு ரஜினி, விஜய் படங்கள் இடையே பாக்ஸ் ஆபிஸில் வசூல் போட்டி நிலவியது. ரஜினிக்குப் பிறகு விஜய்யை தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தங்கள் ஸ்டாராகக் கொண்டாட தொடங்கினர்.

இந்நிலையில் விஜய் இடத்திற்கு பொருத்தமானவர் சிவகார்த்திகேயன் என சிலர்மறைமுகமாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், நடனத்திலும், நடிப்பிலும் குழந்தைகளை தன்வசம் ஈர்த்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இது விஜய்யின் அதே ஃபார்முலா என்கிறது சினிமா வட்டாரங்கள். சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து சிவகார்த்திகேயனுக்கு கைகொடுத்தது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் கடைசியாக வெளியான படங்களின் வசூல் நிலவரம் குறித்தும், விஜய் சினிமாவை விட்டு வெளியேறுவது பாதகத்தை ஏற்படுத்துமா என்பது குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

ரஜினிகாந்த் கடைசியாக நடித்த படங்களின் பட்ஜெட் மற்றும் அவரது சம்பளம்

சிவா இயக்கத்தில் வெளியான ’அண்ணாத்த’

  • அண்ணாத்த படத்தின் பட்ஜெட் : 160 கோடி
  • ரஜினிகாந்த் சம்பளம்: 100 கோடி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ’ஜெயிலர்’

  • ஜெயிலர் பட்ஜெட் : 240 கோடி
  • ரஜினிகாந்த் சம்பளம் : 210 கோடி (படத்தின் வசூலில் 100 கோடியுடன் BMW கார் பரிசும் அடங்கும்)

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’

  • வேட்டையன் பட்ஜெட் : 160 கோடி
  • ரஜினிகாந்த் சம்பளம் : 125 கோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’கூலி’ திரைப்படம்

  • ரஜினிகாந்த் சம்பளம் : 260 - 280 கோடி என தகவல்

இப்படத்திற்கு ரஜினிகாந்த் 260 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றால் ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பார்.

விஜய் கடைசியாக நடித்த படங்களின் பட்ஜெட் மற்றும் அவரது சம்பளம்

நெல்சன் இயக்கத்தில் வெளியான ’பீஸ்ட்’

  • பீஸ்ட் பட்ஜெட்: 150 கோடி
  • விஜய் சம்பளம் : 80 முதல் 100 கோடி வரை

வம்சி இயக்கத்தில் வெளியான ’வாரிசு’

  • வாரிசு பட பட்ஜெட்: 200 கோடி
  • விஜய் சம்பளம்: 110 கோடி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’லியோ’

  • லியோ பட பட்ஜெட்: 300 கோடி
  • விஜய் சம்பளம்: 120 கோடி

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ’கோட்’ திரைப்படம்

  • கோட் பட பட்ஜெட்: 400 கோடி
  • விஜய் சம்பளம்: 200 கோடி

அஜித் கடைசியாக நடித்த சில படங்களின் பட்ஜெட் மற்றும் அவரது சம்பளம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான ’வலிமை’

  • வலிமை பட பட்ஜெட்: 150 கோடி
  • அஜித் சம்பளம்: 70 கோடி

ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான ’துணிவு’

  • துணிவு திரைப்பட பட்ஜெட்: 200 கோடி
  • நடிகர் அஜித் சம்பளம்: 60 முதல் 70 கோடி வரை

மகிழ் திருமேனி இயக்கி வரும் ’விடாமுயற்சி’

  • விடாமுயற்சி பட பட்ஜெட்: 225 கோடி
  • அஜித் சம்பளம்: 160 கோடி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ’குட் பேட் அக்லி’

  • குட் பேட் அக்லி பட பட்ஜெட்: 270 கோடி
  • அஜித் சம்பளம்: 162 கோடி

சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த சில படங்களின் பட்ஜெட் மற்றும் அவரது சம்பளம்

அனுதீப் இயக்கத்தில் வெளியான ’பிரின்ஸ்’

  • பிரின்ஸ் பட பட்ஜெட்: 60 கோடி
  • சிவகார்த்திகேயன் சம்பளம்: 25 கோடி

பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் நடிகர் சிவகார்த்திகேயன் விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடாக 3 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியான ’மாவீரன்’

  • மாவீரன் பட பட்ஜெட்: 35 கோடி
  • சிவகார்த்திகேயன் சம்பளம்: 25 கோடி

ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ’அயலான்’

  • அயலான் திரைப்பட பட்ஜெட்: 75 முதல் 80 கோடி
  • சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ’அமரன்’

  • அமரன் திரைப்பட பட்ஜெட்: 100 கோடிக்கு மேல்
  • சிவகார்த்திகேயன் சம்பளம்: 30 கோடி

தமிழ் சினிமா நடிகர்கள் பட்ஜெட் இப்படி இருக்க, சினிமாவில் இருந்து விஜய் விடை பெற்றால், அது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்துமா என சினிமா வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து பிரபல சினிமா வல்லுநர் ராஜசேகர் பேசுகையில், “விஜய் கரியரில் கில்லி, திருமலைக்கு பிறகு அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் துப்பாக்கி தான். துப்பாக்கி திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது. ரஜினியின் திரை வாழ்வில் எந்திரனுக்கு பின் ஏற்பட்ட சிறிய இடைவெளியை விஜய் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அந்த காலகட்டத்தில் விஜய் படங்கள் தொடர்ந்து வசூல் குவித்தன. அப்போது கத்தி, தெறி ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

விஜய் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினார். அதேபோல் வெளிநாடுகளில் ரஜினி படங்கள் மட்டும் வசூலை அதிகம் பெற்று வந்த நிலை மாறி, கடந்த 10 ஆண்டுகளில் விஜய்க்கும், ரஜினி அளவுக்கு மார்க்கெட் அதிகரித்துவிட்டது.

விஜய் படங்கள் தற்போது குறைந்தபட்சம் 200 கோடி வசூல் செய்கிறது. தமிழகத்தில் மட்டும் இரு முறை 200 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் விஜய் மட்டுமே. விஜய்க்கு முழு பாசிட்டிவ் விமர்சனத்துடன் கடைசியாக வந்த படம் துப்பாக்கி. அதன்பிறகு வந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முழு பாசிடிவ் ரிவ்யூ வந்தால் தான் விஜய்யின் முழு ஆற்றல் என்னவென்று தெரியும். ரஜினிக்கு ஜெயிலர் படம் அதனை காட்டியது.

தற்போது விஜய் படம் நன்றாக இருக்கோ இல்லையோ வாங்கவும், தயாரிக்கவும் தயாராக உள்ளனர். அதுதான் விஜய்யின் வெற்றி. அதே நேரத்தில் தமிழ் படங்களுக்கு இந்தி மார்க்கெட் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு. லியோ இந்தியில் 35 கோடி, கோட் 25 கோடி மட்டுமே வசூல் செய்தது. சலார், பாகுபலி, கேஜிஎப் ஆகிய படங்கள் இந்தியில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வந்தது. லியோ இந்தியில் 150 கோடி வரை வசூல் செய்திருந்தால் 1000 கோடி எதிர்பார்த்திருக்கலாம்.

விஜய்யின் படங்களுக்கு அடுத்தடுத்து வசூல் அதிகரிக்க, ரஜினியின் மார்க்கெட்டை விஜய் தாண்டி விட்டார். விஜய் இந்த இடத்தை பிடிக்க கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆகியுள்ளது. விஜய் இல்லாமல் தமிழ் சினிமாவில் மார்க்கெட் சரிவு ஏற்படும். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எதுவும் சொல்ல முடியாது. ரஜினி, அஜித் படங்களை தவிர்த்து 300 கோடி வசூல் வரவே கஷ்டப்படுவோம் என்றார்.

இதையும் படிங்க: 'அமரன்' படத்திற்கு எதிர்ப்பு: திரையரங்கை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினர்!

சினிமா வல்லுநர் ஸ்ரீதர் பிள்ளை பேசுகையில், “ரஜினி, விஜய் ஆகியோரது படங்களில் அவர்களை பார்க்க தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகின்றனர். அவர்களுக்கு கதையை விட நாயகன் தான் முதல் விருப்பம். அதேநேரத்தில் ஹீரோவால் மட்டுமே ஒரு படத்தை பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற வைக்க முடியாது என்பதை நான் நம்புகிறேன். விஜய்க்கு பிறகு அவரது இடத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பதே எனது கருத்து," என்றார்.

அதேபோல் சினிமா வல்லுநர் மனோபாலா பேசுகையில், “தமிழ் சினிமா பல வருடங்களாக பல்வேறு சூப்பர் ஸ்டார்களை பார்த்துள்ளது. அந்த வகையில் ஒரு நடிகர் சினிமாவை விட்டு அரசியலுக்கு போய்விட்டதால் பாக்ஸ் ஆபிஸ் பாதிக்காது. கன்டென்ட் நன்றாக இருந்தால் ரசிகர்கள் அப்படத்தை ஆதரிப்பார்கள், ஆனால் விஜய்க்கு பான் இந்தியா வெற்றி என்பது இதுவரை இல்லை. வெளிநாடுகளில் விஜய் படங்கள் சாதனை படைப்பது அனைத்தும் வாய்மொழி செய்தியை பொறுத்தது” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details