சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்று சுனிதா, வர்ஷினி, ஆர்னவ் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி தற்போது 90 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் எவிக்ஷனில் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 நபர்களே உள்ள நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் நாக் அவுட் சுற்று வைக்கப்பட்டது. இந்த சுற்றில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்படுவர். இதன்மூலம் பிக்பாஸ் போட்டி விறுவிறுப்படையும்.
அந்த போட்டியாளர்கள் தற்போது உள்ள போட்டியாளர்கள் பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ப்ரோமோ இன்று (ஜன.07) காலை வெளியானது. சுனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வேகத்தில் ஜாக்குலின், விஷால் ஆகியோரை குறித்து வார்த்தைகளால் விளாசித் தள்ளினார்.